மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் உறுப்பினராக திருநங்கை
தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது.
நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது.
அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி.
கார்கில் போருக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி
கனவுகள் ஓய்வதில்லை: சாதனை பயணத்தில் 'சர்ஃபிங்' வீராங்கனை
வாழ்வை முடக்கிய நோய் பாதிப்பை வெல்லும் கவிஞர் யாழினிஸ்ரீ
மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.
வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.
திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.
ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.
யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி.
பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.
17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.
சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி, புத்தாயிரத்தின் துவக்கத்தில் சென்னையில் குடியேறினார்.
எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
"ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி.
நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.
வெள்ளியம்பலம் என்ற தன்னுடைய நடனப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையாக்கியிருக்கிறார். "எங்களுடைய வாழ்க்கை முறை வெற்றியடைந்த வாழ்க்கை முறை. நிறைய திருநங்கைகளுக்கு அதை நாங்கள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.
Tags :



















