கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனையின் உரிமங்கள் ரத்து : தமிழக அரசு எச்சரிக்கை
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனையின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டது. மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து கூடுதல் கட்டண புகார்களை முறையாக கையாள வேண்டும் என்றும் மருத்துவமனைகள் லாபகரமான நோக்கத்துடன் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைத்த நீதிபதிகள், இதனை தமிழ்நாடு அரசு கருணையுடன் பரிசீலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
Tags :