பயணிகள் ரயில்கள் இயக்கியதன் மூலம் ரூபாய் 219.65 கோடி வருமானம்

by Editor / 16-08-2022 08:33:22am
 பயணிகள் ரயில்கள் இயக்கியதன் மூலம் ரூபாய் 219.65 கோடி வருமானம்

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 76வது சுதந்திர தின விழாவில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்‌ தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் பேசும்போது  இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை பயணிகள் ரயில்கள் இயக்கியதன் மூலம் ரூபாய் 219.65 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு காட்டிலும் 154 சதவீதம் அதிகமாகும். இதேபோல ஜூலை மாதம் வரை ரயில் சரக்கு போக்குவரத்து மூலம் வருமானம் ரூபாய் 113.45 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். ஜூலை மாதம் வரை மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூபாய் 359.05 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூபாய் 179.44 கோடி மட்டுமே மொத்த வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது.  சரக்கு போக்குவரத்து மூலமே அதிக வருமானம் ஈட்டப்படும் நிலையில் மதுரை கோட்டத்தில் ஜூலை மாதம் வரை 1.05 மில்லியன் டன் சரக்குகள்  கையாளப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 44.52 சதவீதம் அதிகமாகும்.     ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
மின்மயமாக்கல் பணிகளில், கடந்த ஆண்டில் மதுரை கோட்டத்தில் 400 கிலோமீட்டர் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மதுரை - திருமங்கலம், திருநெல்வேலி - திருச்செந்தூர், காரைக்குடி - மானாமதுரை, மீளவிட்டான் - தூத்துக்குடி, விருதுநகர் - தென்காசி ரயில் பாதைகள் உட்பட 400 கிலோமீட்டர் ரயில் பாதையில்  மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேனி - போடிநாயக்கனூர் இடையே நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள் இந்த ஆண்டில் நிறைவுறும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
  பயணிகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில்நடைமேடைகளை உயர படுத்துதல் மற்றும் நீட்டித்தல், மேற்கூரைகள் அமைத்தல், ரயில் நிலையக் கட்டிடங்களை புனரமைத்தல், நடை மேம்பாலங்கள் மற்றும் மின் தூக்கிகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் சமுகநல நிதியிலிருந்து வழங்கும் ஆயத்த நவீன கழிப்பறை அமைப்புகள் மேலும் 20 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கிறது. கணிப்பொறி வாயிலாக இயங்கும் தானியங்கி பொது தகவல் ஒலிபரப்பு கருவிகள் மேலும் 14 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கிறது.   மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மதுரை கோட்டத்தில் மேலும் திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 3 ரயில் நிலையங்களிலும் மறு சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2022 - 23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்  வகையில் பல்வேறு பல்வேறு ரயில் நிலையங்கள் இலவச விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இதற்காக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மணப்பாறை, பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, ஸ்ரீவல்லிபுத்தூர், திருச்செந்தூர், தென்காசி, கொட்டாரக்கரா ஆகிய 14 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக தேசிய வடிவமைப்பு நிறுவன வழிகாட்டுதலின்படி நிரந்தர விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது, என்றார்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு ஊழியர்கள் நல அதிகாரி டி.சங்கரன், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via