10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஹகும்பேட்டா மண்டலத்தில்கின்னரலோவா கிராமத்தைச் சேர்ந்த சிதாரி சிலக்கம்மா (26) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து, கிராம மக்கள் சிலக்கம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.
ஆனால், கிராமத்திற்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வரும் மருத்துவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தென்று பலமுறை வலியுறுத்தியதால், சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்
ஆம்புலன்ஸ் வாகனமும் சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கின்னரலோவா கிராமத்திற்கு விரைந்திருக்கிறது. ஆனால், சாலை வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் ஹகும்பேட்டாவை தாண்டிச் செல்ல முடியவில்லை. அதையடுத்து, சிலக்கம்மா உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொலைப்பேசி வாயிலாக நிலையை விளக்கிக் கூறி விட்டு 10 கிலோ மீட்டர் தூரத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.
மறுமுனையில் பிரசவ வலியில் சிலக்கம்மா துடித்துக் கொண்டிருக்க, கிராம மக்கள் சிலர் சேர்ந்து `டோலி' கட்டி அவரைத் தூக்கிக் கொண்டு கின்னரலோவாவிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் காத்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சற்றே கால தாமதமாக அனுமதிக்கப்பட்டாலும் மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தாய், சேய் இருவரது உயிரையும் காப்பாற்றி விட்டனர்.
Tags :