ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது தலிபான் படை

by Admin / 14-08-2021 12:35:30pm
ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது தலிபான் படை

தலிபான்கள் இன்னும் 90 நாட்களில் தலைநகர் காபூலை கைப்பற்றலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன. அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும், ஆப்கானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கான் எல்லையோர பகுதிகளில் இப்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானின் எல்லையோர மாகாணங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலிபான்களை சமாளிக்க முடியாமல் ஆப்கான் அரசு படை திணறி வருகிறது. அடுத்த தலைநகர் காபூலை கைப்பற்றுவதற்கான பணிகளில் தலிபான்கள் செயல்பட்டுவருகின்றனர்.

இதே நிலையில் தலிபான்கள் முன்னேறிச் சென்றால், அவர்கள் தலைநகர் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்த முடியும், 90 நாட்களில் கைப்பற்றலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தலிபான்கள் காபூலை சுற்றி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்திகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்கள் தலிபான்களின் வசம் வந்துவிட்டதால், காபூல் நகரத்திலும் அரசுப் படைகள் பெரிய அளவில் எதிர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

தலிபான் படையினர் தற்போது காபூலில் இருந்து  வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை காபூலில் இருந்து அழைத்துச் செல்லும் முயற்சியில் அந்தந்த நாடுகளின் அரசுகள் முயற்சி மேற்கொள்கின்றன. தூதரகங்களில் உள்ளவர்களும் வெளியேற தயார்நிலையில் உள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories