கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கிறார் குடியரசுத் தலைவர்

by Staff / 25-05-2023 02:55:40pm
கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கிறார் குடியரசுத் தலைவர்

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையின் ஜூன் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1, 000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வா் மு. க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினாா். இதற்காக 4. 89 ஏக்கா் நிலம் தோவு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51, 429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டடமான 'ஏ' பிளாக்கில் ரூ. 78 கோடியில் 16, 736 சதுர மீட்டா் பரப்பளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிா்வாகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 'பி' பிளாக் ரூ. 78 கோடி மதிப்பீட்டில் 18, 725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டடமான 'சி' பிளாக் ரூ. 74 கோடியில் 15, 968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வாா்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ஆம் தேதி அந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சாா்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்கிடையே, ஜூன் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிறகு, ஜூன் 20-ஆம் தேதி கிண்டி மருத்துவமனையை திறந்துவைக்க தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திறப்பு விழா தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஓரிரு நாள்களில் தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags :

Share via