விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

by Staff / 22-11-2022 03:54:05pm
விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். மேலும் கோவை வந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே என்ற பெயரில் போராட்டக் குழு ஒன்றை தொடங்கினர். இவ்வமைப்பின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தி இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்கள் அதிகம் உள்ள அன்னூர் சுற்றுவட்டாரத்தில் சிப்காட் அமைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்று சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுனர். இதனால் அன்னூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

 

Tags :

Share via