நடுரோட்டில் படுத்து கிடந்த போதை ஆசாமி

by Staff / 20-01-2023 04:59:47pm
நடுரோட்டில் படுத்து கிடந்த போதை ஆசாமி

அந்தியூர் தவுட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க தொழிலாளி குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த துண்டை எடுத்து உதறினார். பின்னர் துண்டை சிறிய தலையணையாக மாற்றி ரோட்டில் வைத்தார். இதையடுத்து நடுரோட்டில் துண்டில் தலைைய வைத்து வீட்டில் படுத்து தூங்குவது போல் சவுகரியமாக படுத்தார். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார், சரக்கு வேன், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் ஒரு சிலர் ரோட்டில் இந்த காட்சியை கண்டும் காணாதது போல் தங்களுடைய வாகனங்களை விலக்கி சாலையோரமாக சென்றனர்.மேலும் அந்த வழியாக சென்றவர்களில் சிலர், நடுரோட்டில் படுத்து கிடந்தவர் உடல் நலம் சரியில்லாமல் மயங்கி கீழே விழுந்துவிட்டார் என நினைத்து கருணையோடு அவரை நெருங்கி சென்று உற்று பார்த்து எழுப்பினர்.அப்போதுதான், ரோட்டில் படுத்து கிடந்தவர் நல்ல குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் நமக்கு ஏன் வம்பு என அங்கிருந்து சென்றுவிட்டனர். எனினும் ஒரு சிலர் ரோட்டில் படுத்துக்கிடந்த போதை தொழிலாளியை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு போதை தலைக்கேறி இருந்தது. இதனால் அவர் ரோட்டில் படுத்தபடி எழுந்து செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்கும்படி செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். இதை கேட்டதும் ரோட்டில் படுத்துக்கிடந்த போதை தொழிலாளி, சில நிமிடத்தில் தானாக எழுந்து உட்கார்ந்தார். பின்னர் எழுந்து போதையில் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றார். குடிபோதையில் நடுரோட்டில் படுத்து கிடந்த தொழிலாளியால் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories