தமிழரின் பெருமை -கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை

by Editor / 22-07-2021 08:26:13pm
தமிழரின் பெருமை -கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம் வரை கீழடியில் மட்டுமே நடந்துகொண்டிருந்த பணி ஆறாம் கட்டத்திலிருந்து 2-3 கீ.மீ தொலைவில் உள்ள மற்ற மூன்று தளங்களில்தொடங்கியது.

முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் ஏழாவது கட்ட அகழாய்வு பணியில் சமீபத்திய கண்டுபிடிப்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை அகரம் தளத்தில் கிடைத்துள்ளது.
அது அகலத்தில் பத்து சென்டிமீட்டருக்கு குறைவாகவும், நான்கு சென்டிமீட்டர் உயரத்தையும் கொண்டதாக இருக்கிறது என்று கூறுகிறார் தொல்லியல் துறை துணை இயக்குனர், கீழடி அகழாய்வின் இயக்குநருமான ஆர். சிவானந்தம்.

இந்த விலங்கு பொம்மையின் கால், தலை மற்றும் வால் பகுதிகள் கிடைக்கவில்லை. அவை கிடைத்தால்தான் அது என்ன விலங்கு என்று கூற இயலும். நான்காம் கட்டப் பணிகளின் போது சுடுமண்ணால் ஆன குதிரையின் முகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போதுதான் ஒரு விலங்கு உருவ பொம்மை (animal figurine) கிடைத்துள்ளது, என்று கூறுகிறார்.

முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது வீட்டு விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் நான்காம் கட்டத்தில் கிடைத்தது. சில எலும்பு மாதிரிகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் அவை ஜல்லிக்கட்டு காளைகளின் எலும்புகள் என்று தெரியவந்தது. அகரம் சங்ககால வாசிப்பிடமாகத் திகழ்ந்திருப்பதால், மக்கள் ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தவுடன் வீட்டின் அருகே புதைத்திருக்கிறார்கள், என்று கூறுகிறார் சிவானந்தம்.

கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது. காட்டுப்பன்றி மற்றும் ஆடுகளின் எலும்புகளில் வெட்டு தடயங்கள் காணப்பட்டதால், அவை அசைவ உணவிற்காக அக்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்க கூடும், என்று சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர ஒரு விலங்கின் எலும்புக்கூடு ஒன்று ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்தது. அது சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரை டன் எடையுள்ள எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பப்பட்டது போக மற்ற பொருட்கள் அனைத்தும் மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via