முல்லைப்பெரியாறு அணையில் விஞ்ஞானிகள் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்கும் கருவிகளை பொருத்துவதற்கான இடங்களை மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை அளவிடும் கருவியை பொருத்துவதற்கு கடந்த 30.06.2020 ல் ரூ.99.95 லட்சம் நிதி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்தை பொதுப்பணித்துறையினர் செலுத்தி விட்டனர்.
இந்தக் கருவிகளை முல்லைப்பெரியாறு அணையில் எந்தந்த இடங்களில் பொருத்துவது என ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆர்.விஜயராகவன், எம்.சேகர் ஆகியோர் வியாழக்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு வந்தனர்.
அணைப்பகுதியில் நில அதிர்வை அளவிடும் ஒரு கருவியையும், முடுக்கத்தை அளவிடும் இரண்டு கருவிகளில், அணையின் மேல்புறத்திலும், அடித்தளத்திலும் பொருத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து, அந்த இடங்களில் அடிப்படை வேலைகள் செய்ய அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வினிடம் ஆலோசனைகள் நடத்தினர்.
இது பற்றி செயற்பொறியாளர் கூறும்போது, நில அதிர்வை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் முடுக்கத்தை அளவிடும் ஆக்சலரோகிராப் கருவிகள் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
Tags :



















