பங்குனி உத்திரமும்....! குலதெய்வ வழிபாடும்...!!

by Editor / 20-03-2024 12:58:25am
பங்குனி உத்திரமும்....!  குலதெய்வ வழிபாடும்...!!

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் சாஸ்தா, அய்யனார் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் வழிபடுவார்கள்.

இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நல்ல பலனை பெற்றுத் தரும்.குலதெய்வ கோவிலில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் கோடி நன்மை தரும்.பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து வழிபடுங்கள்.இரட்டிப்பு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வீர்கள்.

 

Tags :

Share via