‘முஃபாஸா: தி லயன் கிங்’ கார்ட்டூன் படம்

by Admin / 23-12-2024 01:04:01pm
‘முஃபாஸா: தி லயன் கிங்’ கார்ட்டூன் படம்

Mufasa: The Lion King விமர்சனம்: தொய்வில் மறைந்து போன விஷுவல் பிரம்மாண்டம்!

1994-ஆம் ஆண்டு வெளியான ‘கல்ட் கிளாசிக்’ கார்ட்டூன் படமான ’தி லயன் கிங்’ உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. 2டி அனிமேஷன் வடிவில் இருந்த அந்தப் படத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு லைவ் ஆக்‌ஷனாக உருவாக்கி வெற்றி கண்டது டிஸ்னி. தற்போது அப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றான ‘முஃபாஸா’ சிங்கத்தின் கதை தனியாக ‘முஃபாஸா: தி லயன் கிங்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.பபூன் குரங்கான ரஃபீகி சிம்பாவின் மகளிடன் சொல்லும் ஃபிளாஷ்பேக்தான் முழுக் கதை. சிறுவயதில் தனது தாய் நிலத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் முஃபாஸா (தமிழில் அர்ஜுன் தாஸ் குரல்), வேறு சில சிங்கங்களில் ராஜ்ஜியத்தில் நுழைகிறது. அங்கு இருக்கும் டாக்கா (அசோக் செல்வன்) என்ற குட்டி சிங்கம் ஒன்று முஃபாஸாவின் நண்பனாகிறது. ஆனால், அந்தச் சிங்க கூட்டத்தின் தலைவனான முபாசி (நிழல்கள் ரவி) அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனினும் வேண்டா வெறுப்பாக பெண் சிங்கங்களுடன் அதனை வளர அனுமதிக்கிறது.

ஓர் எதிர்பாரா சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் சிங்கத்தை முஃபாஸா கொன்று விடுகிறது. இது அந்தக் கூட்டத்தின் தலைவனாக கிரோஸுக்கு (நாசர்) கடும் கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது. முஃபாஸாவை கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் துரத்தும் கிரோஸ் கூட்டத்திடமிருந்து முஃபாஸாவும், டாக்காவும் தப்பிக்கின்றனர். போகும் வழியில் அவர்களுடன் வேறு சில விலங்குகளும் சேர்ந்து கொள்கின்றன. சிறுவயதில் தனது தாய் கூறிய ’மிலேலே’ என்னும் சொர்க்க பூமியை தேடிச் செல்கிறது முஃபாஸா. எதிர்களிடமிருந்து முஃபாஸாவும் நண்பர்களும் தப்பித்து மிலேலேவுக்கு சென்றார்களா என்பதுதான் படத்தின் கதை.

இது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி உலக அளவிலும் இரண்டாம் பாக சீசன் போலும். டிஸ்னியே கூட தனது சூப்பர்ஹிட் அனிமேஷன் படங்களான ‘இன்சைட் அவுட்’, ‘மோனா 2’ என்று பழைய படங்களையும் தூசி தட்டி எடுத்து 2-ஆம் பாகங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது ‘‘முஃபாஸா: தி லயன் கிங்’.

1994-ஆம் ஆண்டு ‘லயன் கிங்’ கார்ட்டூன் படம் முன்பே குறிப்பிட்டபடி ஒரு கல்ட் கிளாசிக். கல்ட் கிளாசிக் படங்களில் கைவைப்பது என்பது முள் வேலியில் நடப்பது போன்ற ரிஸ்க்கான விஷயம். அந்தப் படங்களுக்கு பெருமை சேர்ப்பதை விட முக்கியமானது அவற்றின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் இருப்பது. அந்த வகையில் 2019-ல் வெளியான ‘லயன் கிங்’ லைவ் ஆக்‌ஷன் படத்தால் ஒரிஜினல் படத்துக்கு பெரிய அளவில் பாதகம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ஒரிஜினலில் இருந்த உணர்வுபூர்வ காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகள் இதில் முற்றிலுமாக மறைந்து போயிருந்தன.

இந்தச் சூழலில், ’லயன் கிங்’ படத்தின் முன்கதை (Prequel) என்ற விளம்பரத்துடன் வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க அசல் படத்தில் கிளாசிக் தன்மைக்கு வேட்டு வைக்கும் முயற்சி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இறந்துபோன ஒரு கதாபாத்திரத்தை தோண்டி எடுத்து திரைக்கதையில் நோக்கமும் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கி ‘பல்ப்’ வாங்கியிருக்கிறது டிஸ்னி. .இப்படத்தின் பின்னால் இருக்கும் ஒரே நோக்கம் ’தி லயன் கிங்’ படம் தொடர்பான நாஸ்டால்ஜியா உணர்வுகளை தூண்டி அதன் மூலம் கல்லா கட்டுவது மட்டுமே என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

படம் தொடங்கி முதல் 15 நிமிட காட்சிகள் உண்மையிலேயே ரசிக்கும்படி இருந்தன. ரஃபீக்கி சொல்லத் தொடங்கும் பிளாஷ்பேக்கின் ஆரம்பத்தில் முஃபாஸா குடும்பம் வெள்ளத்தால் பிரிவது, அதன் பிறகு வேறொரு காட்டுக்கு வரும் முஃபாஸாவுக்கு அடைக்கலம் தரும் டாக்காவின் தாய் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த படம், வில்லனின் அறிமுகத்துக்குப் பிறகு படு தொய்வாக, யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் நகரத் தொடங்கிவிட்டது.

முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வலுவான நோக்கம், பின்னணி இருக்கும். பபூன் குரங்கான ரஃபீக்கி அதில் சிறிது நேரமே வந்தாலும் கதையின் முக்கிய திருப்பத்துக்கு காரணமாக அதன் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும். ஆனால். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட படம் முழுக்க ரஃபீக்கி வருகிறது. ஆனால் அது கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே நிலைதான் பெண் சிங்கம் நாலா, சாஸூ பறவை போன்ற கேரக்டர்களுக்கும்.

முஃபாஸா உடன் மற்ற விலங்குகள் எல்லாம் அப்படியே போகிற போக்கில் வந்து சேர்ந்து விடுகின்றன. இவை திரைக்கதையில் எந்தவொரு புத்திசாலித்தனமும் இன்றி சோம்பேறித்தனத்துடன் எழுதப்பட்டுள்ளன. முதல் பாகத்தின் சிறப்பம்சமே அதன் எமோஷனல் காட்சிகள். இதில் அவற்றுக்கு எந்த இடத்திலும் வேலை இல்லை.

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் விஷுவல் பிரம்மாண்டம். ஐமேக்ஸ், எபிக் போன்ற பெரிய திரையில் பார்க்கும்போது அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். படத்தில் வரும் விலங்குகள், நிலப்பரப்புகள் என மேக்கிங் படுதுல்லியம். முதல் பாகத்தில் ஒரிஜினல் அனிமேஷன் படத்தில் இடம்பெற்ற ஹான்ஸ் ஸிம்மரின் பாடல்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், இதில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.

தமிழில் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர்களின் பங்களிப்பு வெகு சிறப்பு. குறிப்பாக அர்ஜுன் தாஸ், நாசர். மற்ற மொழிகளில் ஷாருக்கான், மகேஷ் பாபு போன்ற சூப்பர் ஸ்டார்களின் குரலை பயன்படுத்திய டிஸ்னி தமிழில் ஸ்டார் வேல்யூவை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இயற்கையாகவே கர்ஜிக்கும் குரலை கொண்ட அர்ஜுன் தாஸை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான முடிவு. அவரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

மொத்தத்தில் இந்த தேவையற்ற இரண்டாம் பாகத்தில் நினைவில் கொள்ளத்தக்க ஒரே அம்சம் அதன் விஷுவல் பிரம்மாண்டம் மட்டுமே. ஆனால், எந்தவித சுவாரஸ்யமும் அற்ற தொய்வான திரைக்கதையில் அதுவும் காணாமல் போய்விடுவது சோகம். ஒரிஜினல் லயன் கிங் குழந்தைகளுக்கான கார்ட்டூன் என்பதை தாண்டி ஓர் உணர்வுபூர்வ படைப்பு என்று நிலைத்து நிற்கும் நிலையில், ‘முஃபாஸா: தி லயன் கிங்’ பத்தோடு பதினொன்றாக வரும் குழந்தைகள் படம் என்ற அளவிலேயே நின்று விட்டது.

நன்றி-.rtx

 

Tags :

Share via