சுபிட்சங்களைத் தரும் வரலட்சுமி விரதம்

by Writer / 19-08-2021 05:50:47pm
   சுபிட்சங்களைத் தரும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்  (ஆகஸ்ட்  20 ஆம் தேதி)

வரலட்சுமி விரதம் ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் ஆவணி மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வருகிறது. வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 - 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவார் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரத நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

லட்சுமி செல்வத்தின் அடையாளம், மகிழ்ச்சியின் அடையாளர். அன்னை மகாலட்சுமியை வழிபட்டாள் சகல செல்வமும் கிடைக்கும், வாழ்க்கை சுபிட்சங்கள் நிறைந்திருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

நாடு முழுவதும் மகாலட்சுமி வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்னை மகாலட்சுமிக்கு பிடித்த நாள். குத்துவிளக்கிலும், புன்னகையுடன் இருக்கக்கூடிய பெண்களின் முகத்திலும் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்ற நம்பிக்கை உள்ளது. அழும் பெண்களை அன்னை மகாலட்சுமிக்கு பிடிக்காது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள்.

ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.

இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம். கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.

ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. நம்முடைய வீட்டிற்கு வெள்ளிக்கிழமைகளில் வரும் சுமங்கலிப்பெண்களுக்கு குங்குமம் கொடுத்து வழிபட வேண்டும். வரலட்சுமி விரத நாளில் புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்க வேண்டும்.

லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். அன்னை மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

வரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.

வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

வரலட்சுமி விரதத்தின் போது வீடு அசுத்தமாக இருக்கக் கூடாது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் ஏற்படும்.

கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம் வைத்திருக்க வேண்டும். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சு போடவேண்டும். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும்.

பட்டுத்துணியல் மட்டுமே அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் உள்ள வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது.

வரலட்சுமி விரதம் இருக்கும் நாளில் அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது. சர்க்கரைப் பொங்கல் பாயாசம் நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும்.

வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம்.

அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மகாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும் இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலட்சுமியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர்.

--கட்டுரை - ஆர்.சக்தி 

 

Tags :

Share via