"மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கலாம் ": கொடநாடு கொலை வழக்கு குறித்த கனிமொழி எம்பி

by Editor / 19-08-2021 05:47:00pm

 


மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என்றும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுக்க முடியமால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக விமர்சனம் செய்து வருவதாக  விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.


விளாத்திகுளம்  அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் அறையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி  ஆக்சிஜன் அறையை திறந்து வைத்தார். பின் அங்கிருந்த பொதுமக்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி  செய்தியாளர்களிடம் பேசியபோது.


கொடநாடு கொலை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது, "மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்" என கூறினார்.


தொடர்ந்து அவர் பேசுகையில்  மக்களுக்கு தெரியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேறி வருகிறதா இல்லை நிறைவேற்றவில்லையா என்று, பத்து வருடங்களாக  மக்களைதொடர்ந்து ஏமாற்றி கொண்டு இருந்ததால் தான் இன்று மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றியது கிடையாது, 


ஆனால் தளபதி மு க ஸ்டாலின் தலைவர் கலைஞர் வழியில் முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்றுவரை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக  தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது. ஆனால், இதை பொறுக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் செய்யும் நோக்கில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகம் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு பெரிய கொலை வழக்கை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை, யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தன்னுடைய கடமையை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதில் அவர்களுக்கு (அதிமுகவிற்கு) மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என்றார்.

எதிர்க்கட்சியினருக்கு சட்டமன்றத்தில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோதுயார் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவருடைய கருத்துக்களும் கேட்கப்படுகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலும் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோன்று சட்டமன்றத்திலும் பேச வாய்ப்பளித்த போது ? அவர்கள் பேச முடியாமல் வெளியே சென்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

 

Tags :

Share via