இரவு நேர கடைகள், அரசு அனுமதிக்க விக்ரமராஜா வலியுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: தீபாவளி நேரம் என்பதால் அதிகாரிகள் எந்தக் கடைகளுக்கும் விதி மீறல்கள் எனக் கூறி அபராதம் விதிக்கக் கூடாது. பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச் சாலையிலும் சுங்கச் சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக முதல்வருக்கு வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை அளிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புக்காக மெழுகு பூசி வரும் ஆப்பிள் போன்ற பழங்களை கடைகளில் வந்து ஆய்வு செய்து பறிமுதல் செய்யாமல், அவை எங்கிருந்து வருகிறதோ அங்கேயே தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், ஆலங்குளம் பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதி என்று உள்ளதால் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Tags :