குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

by Editor / 24-08-2021 05:39:07pm
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக பதிவான நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் விளைவாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. மே மாதத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் பதிவான நிலையில் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையாத காரணத்தால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த முறை அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் நீலகிரி, உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து நெட்கடிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தளர்வுகள் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அங்கு மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு யாரும் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via