ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்களை வைத்துச் சென்ற கணவன்- மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்களை வைத்துச் சென்ற கொலை வழக்கில், அசாமைச் சேர்ந்த கணவன்- மனைவியை காவல்துறையினர் மணிப்பூரில் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் அஸ்கர் அவரது மனைவி பகமதி மாஜி சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் இந்த கொலை நடந்துள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சென்னையிலிருந்து புது தில்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கேண்ட் ரயில் நிலையத்தை அடைந்தபோது, ஒரு பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியது. அதனைத் திறந்து பார்த்தபோது, தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்டன.காவல்துறையினர் துப்புத் துலக்கி கூடுவாஞ்சேரியில் உள்ள குற்றவாளிகளின் வீட்டைச் சோதனை செய்தபோது, அங்குள்ள பெரிய பாத்திரத்தில் மீதி உடல் பாகங்களை வேக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய தம்பதியைத் தேட சென்னை தாம்பரம் காவல்துறையினர் மற்றும் ஆக்ரா ரயில்வே காவல்துறையினர் இணைந்து தனிப்படை அமைத்தனர்.குற்றவாளிகளின் மொபைல் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்திலுள்ள காசிம்பூர் பகுதியில் மறைந்திருந்த கணவன், மனைவி இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, கூடுவாஞ்சேரிகாவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெண்ணின் காணாமல் போன தலைப் பகுதியைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
Tags :

















