ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கணக்கு தணிக்கை திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கணக்கு தணிக்கையின் போது திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினை சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கோவிலை நிர்வகிக்க மாநில அரசு தனி அறக்கட்டளையை அமைக்கலாம் என்று கேரள ஐகோர்ட் கடந்த 2011-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது. கோவிலை நிா்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
அதே வேளையில், கடந்த 25 ஆண்டுகளில் கோவிலுக்கான வரவு-செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டுமெனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் கடந்த வாரம் நடைபெற்றது.
அப்போது, கோவில் நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.வசந்த் வாதிடுகையில், ''கோவில் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கோவிலின் மாதாந்திர செலவு சுமார் ரூ.1.25 கோடியாக உள்ளது. ஆனால், வருமானம் ரூ.60- 70 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கொண்ட அரச குடும்ப அறக்கட்டளை தணிக்கையில் இருந்து நழுவ முயல்கிறது. அந்த அறக்கட்டளையின் வரவு-செலவு விவரங்களையும் தணிக்கை செய்ய வேண்டும்'' என்றார்.
அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் வாதிடுகையில், ''கோவிலின் பூஜை, வழிபாடு சார்ந்த விவகாரங்களை மட்டுமே அரச குடும்ப அறக்கட்டளை கண்காணிக்கும். கோவிலின் நிா்வாகத்துக்கும் அறக்கட்டளைக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. இந்த விவகாரம் தொடர்பான ஆரம்ப நிலை மனுக்களில் அறக்கட்டளை எதிர்மனுதாரராக சோக்கப்படவில்லை. எனவே, அறக்கட்டளையின் வரவு- செலவு விவரங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் அந்த வழக்கில் தீர்ப்பளித்தனர்.
அதன்படி, ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது. இன்னும் 3 மாதத்துக்குள் அல்லது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கணக்கு தணிக்கையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
Tags :