பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை  உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் குழு

by Editor / 22-09-2021 04:32:09pm
பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை  உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் குழு



பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.இக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.


கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் சிங் இடம் பெற்றுள்ளனர்.

கல்வி திட்டமிடல் நிர்வாகம் தேசீயக் கழகத்தின் தலைவர் மகேஷ் சந்திரபந்த், நேஷனல் புக் டிரஸ்ட் சேர்மன் கோவிந்த் பிரசாத் சர்மா, ஆந்திரபிரதேஷ் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழக துணை வேந்தர் டிவி கட்டிமணி, இந்திய வம்சாவளி அமெரிக்க கணிதப் பேராசிரியர் மஞ்சுள் பார்கவா, பயிற்சியாளர் சமூக ஆர்வலர் எம்.கே.ஸ்ரீதர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.


பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள், குழந்தைப் பருவத்தில் பாதுகாப்பு, ஆசிரியர் கல்வி மற்றும் வயதானோர் கல்வி குறித்து இக்குழு விவாதிக்கும். தேசீய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரைகள் குறித்தும், சீர்திருத்தம் குறித்தும் இக்குழு விவாதிக்கும் என்று கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தவிர ஒவ்வொரு பாடத்திலும் நிபுணர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை தேவைப்படும்போது அழைத்து, அவர்களின் கருத்துக்களையும் இக்குழு கேட்டறியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Tags :

Share via