தம்பிதுரை மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Editor / 23-09-2021 03:00:48pm
தம்பிதுரை மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

அதிமுகவைச் சேர்ந்த மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொதுநலச் சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராமப் பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசுக் கட்டிமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சாரத் துணை நிலையம், தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்தப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை அரசின் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் தரப்பில் தங்களுக்கு எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் (மனுதரார் மற்றும் தம்பிதுரையின் பல்கலைக்கழகம்) உரிய நோட்டீஸ் வழங்கி சர்வே முழுமையாக நடத்தப்பட வேண்டும். இந்த சர்வே நிகழ்வை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்வே செய்தது தொடர்பான அறிக்கையை மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை முன்று வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.

 

Tags :

Share via