குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில்கொடியேற்றம்,

by Editor / 28-09-2021 12:01:05pm
குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில்கொடியேற்றம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபார் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான 15ஆம் தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை பெற்று வந்து முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொடியேற்றம், சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தசரா விழாவை முன்னிட்டு, காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணியும் பக்தர்கள் கடந்த வாரமே விரதத்தைத் தொடங்கியுள்ளனர். குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோவில் கடற்கரையில் புனித நீராடி, துளசிமாலையை கடலில் நனைத்து, கோவில் முன்பு வந்து அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கியுள்ளனர். வழக்கமாக துளசிமாலையை அம்மன் பாதத்தில் வைத்து பூசாரி எடுத்து கொடுத்த பின்னர் பக்தர்கள் அணிவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, கோவில் முன்பு பெரியவர்கள் அல்லது குழந்தைகளிடம் துளசிமாலையை கொடுத்து பக்தர்கள் அணிந்து கொள்கின்றனர்.

மாலை அணியும் பக்தர்கள் கடந்த சில வாரங்களாகவே கோவிலுக்கு வந்து மாலை அணிந்து வருகின்றனர். மாலை அணியும் பக்தர்கள் நண்பர்களுடன், குடும்பத்துடன், கார், வேன், இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.

கடலில் நீராடி, துளசி மாலை பாசி மாலை வாங்கி அதை கடலில் நனைத்து, சிவப்பு ஆடை அணிந்து கோவில் வளாகத்திற்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி விடுகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் சிகப்பு ஆடை அணிந்து விரதம் இருந்து வரும் தசராபக்தர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். இந்த கோவிலில் அக்டோபர் 6ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த இரு நாட்களும் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குலசை முத்தாரம்மன் கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது. நவராத்திரி விழா தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. குலசை கோவிலுக்கு சுமார் 800க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே மற்ற நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.

இதனால் தசரா திருவிழா கொடியேற்றம் வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி அக்டோபர் அன்றும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி திருவிழா முடியும் நாள் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை.

பக்தர்கள் கோவிலுக்கு வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த பகுதியில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமாக திருவிழாவின் போது கிராம பகுதிகளில் உள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும். தற்போது பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் வந்து தங்கள் குழுவுக்கான காப்பு கயிறுகளை கோவில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.பதிவு செய்யாத தசரா குழுக்கள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை உடனடியாக அணுகி அக்டோபர் 4ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் மூலம் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via