முன்னாள் அமைச்சர் வேலுமணியின்  ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

by Editor / 29-09-2021 05:18:19pm
முன்னாள் அமைச்சர் வேலுமணியின்  ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

 


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். அரசு ஊழியரான முருகானந்தம் மற்றும் இவரது மனைவி காந்திமதி வருமானத்திற்கும் அதிகமாக 100 சதவிகிதம், அதாவது ரூ.15 கோடி வரையிலும் வருமானத்திற்கும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.


புதிய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள காம்ப்ளக்ஸ், திருமண மண்டபத்திலும் சோதனை நடைபெற்றது. அதோடு, புதுக்கோட்டை, கடுக்காக்காட்டில் உள்ள முருகானந்தத்தின் சகோதரர்களான பழனிவேல், ரவிச்சந்திரன் இருவரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி இமயவர்மன் தலைமையில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூரைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் 6 குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் சகோதரர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் அரசு ஊழியரான முருகானந்தம் அவர்களின் சகோதரர்களின் வளர்ச்சி அபரிவிதமானது என்கிறனர். முருகானந்தம், அவரது சகோதரர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் ஆதரவாளர்களாகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் இவர்கள் பெயரில் அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக எடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கான எல்இடி லைட் பொருத்துதல், சாலையில் ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்துதல், கொரோனா காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களையும் இவர்கள் முறைகேடாகப் பெற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via