1991 - 1996 ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

by Editor / 29-09-2021 05:00:48pm
1991 - 1996 ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உட்பட 3 பேர் ஊழல் குற்றவாளிகள் என அறிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


கடந்த 1991 1996 ம் ஆண்டு காலகட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. அமைச்சரவையில், சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் இந்திரகுமாரி. அன்றைய சமூகநலத்துறை அமைச்சர் மீது, 1997 ம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக இருந்த லட்சுமி பிரானேஷ், ஊழல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியின் கணவர் பாபு, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதாக விண்ணப்பித்து, ரூ.15.45 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், விசாரணையில் அவர் பள்ளியே நடத்தவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து, இந்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.


இந்நிலையில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அண்ணா தி.மு.க. அமைச்சர் இந்திர குமாரி, கணவர் பாபு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் என்பவர் உயிரிழந்துவிட்ட நிலையில், வெங்கடேஸ்வரன் என்பவர் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.


தண்டனை விபரங்கள் மதியத்திற்கு மேல் அறிவிக்கப்படும் என அறிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவருடைய கணவர் பாபு ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில் (1991 - 1996) சமூக நலத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, தற்போது தி.மு.க.வில் இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via