பாலகுமாரன் படைப்புகளை  பயன்படுத்தினால்   கடும் நடவடிக்கை: மகன் சூர்யா எச்சரிக்கை

by Editor / 29-09-2021 04:57:14pm
 பாலகுமாரன் படைப்புகளை  பயன்படுத்தினால்   கடும் நடவடிக்கை: மகன் சூர்யா எச்சரிக்கை

 

பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் படைப்புகளின் காபிரைட் யாருக்கும் தரப்படவில்லை. எங்கள் வசம் தான் உள்ளது. காபிரைட் மீறி யாரும் அவரது படைப்புக்களை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் அவர்கள் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது மகன் சூர்யா பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.


பாலகுமாரன் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். திரைத்துறையில் பணி யாற்றுவதற்காக தனியார் நிறுவனப் பணியைத் துறந்தார். இவர் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் பலநூறு கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப்பூக்கள், அகல்யா, மவுனமே காதலாக, கரையோர முதலைகள், உள்ளம்கவர் கள்வன், தாயுமானவன், ஆனந்தவயல், என்றென்றும் அன்புடன், பேய்க்கரும்பு, பொன்விட்டில், உச்சித் திலகம், ராஜராஜ சோழன் பற்றி உடையர் முதல் பாகத்திலிருந்து 6 பாகம், இது போதும், அம்மையப்பன் தெரு, காலடித் தாமரை, பாலகுமாரன் சிறுகதைகள் புத்தகம் வரை மொத்தம் 294 புத்தகங்கள் இவரது படைப்பாக வெளி வந்துள்ளன.


இந்நிலையில் பாலகுமாரனின் படைப்புகள் சம்பந்தமாக அவரது வழகறிஞர் விஜயன் சுப்பிரமணியன், பாலகுமாரனின் மகன் வெங்கடரமணன் எனப்படும் சூர்யா பாலகுமாரனின் பெயரில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாலகுமாரன் பிரபல இந்திய தமிழ் எழுத்தாளர். 294 புத்தகங்களை படைத்திருக்கிறார். ஏராளமான வெற்றிப் படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதி இருக்கிறார்.பாலகுமாரனின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் முழு காப்பீட்டு உரிமை (காபிரைட்) பெற்றவர், அவரது மகன் வெங்கடரமணன் எனப்படும் சூர்யா பாலகுமாரன்.

பாலகுமாரனின் மறைவுக்குப் பிறகு அவரின் 294 புத்தகங்கள் படைப்புகளுக்கான டைட்டில் அதாவது தலைப்பின் உரிமையையும் அவரே வைத்திருக்கிறார். இதற்கிடையில் என்னுடைய கட்சிக்காரரின் காப்பீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் பாலகுமாரின் படைப்புகளை புத்தக வடிவில் வெளியிடும் முயற்சியிலும் தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் திரைப்படமாகத் தயாரிக்கும் முயற்சியிலும், வெப் சீரிசாக தயாரிக்கும் முயற்சியிலும், டெலிவிஷன் தொடர்களாகத் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக சமீபத்திய பத்திரிகைத் தகவல்கள், ஆன்லைன் கட்டுரைகள்/தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


புத்தகத்தை தழுவி திரைப்படம், வெப் சீரிஸ் எடுக்க எந்த ஒரு நபருக்கும் என் கட்சிக்காரர் உரிமம் அளிக்கவில்லை. பாலகுமாரனின் படைப்பைப் போல, அதையொட்டி புத்தகம் வெளியிட்டாலோ, திரைப்படம், வெப் சீரிஸ் தயாரித்தாலோ, கதை, திரைக்கதை, கதாபாத்திரத்தின் வடிவில் அல்லது காட்சி அமைப்பு சம்பவக் கோர்வைகள் போல எது வந்தாலும்...

சம்பந்தப்பட்டவர்கள் மீது சிவில் / கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அது தமிழ் அல்லது இந்தி அல்லது உலகின் எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதில் டைட்டில் (தலைப்பு) காணப்பட்டால்... அது என் கட்சிக்காரரின் காபி ரைட் மற்றும் இதர உரிமைகளை மீறும் செயலாகும்.என் கட்சிக்காரரின் காபி ரைட் உரிமையை பாதிக்கும் விதத்தில் அல்லது மீறும் விதத்தில் யாரும் செயல்பட்டிருப்பதாகத் தெரிய வந்தால்... அது பற்றி உடனடியாக எங்களுக்கு 17, லட்சுமணன் தெரு, நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010 என்னும் விலாசத்துக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via