ரத்ததானம் செய்வோம்; மனித  உயிர்களை காப்போம்: ஸ்டாலின்

by Editor / 01-10-2021 04:00:00pm
 ரத்ததானம் செய்வோம்; மனித  உயிர்களை காப்போம்: ஸ்டாலின்

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி மகிழ்வுடன் ரத்ததானம் செய்வோம்; மனித உயிர்களைக் கனிவுடன் காப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தேசிய தன்னார்வ ரத்ததான நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மனித உயிரை காப்பாற்றும் உயரிய செயலான தன்னார்வ ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான நாளின் கருப்பொருள் “உயிர் காக்கும் உதிர தானம்”என்பதாகும்.


தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அறிவியலில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் ரத்தம் என்ற அதிசய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் ரத்தம் உள்ளது.


ரத்ததானத்தின் போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்ததானம் செய்த பின் 24 மணி நேரத்திற்குள்ளாக நம் உடல் இழந்த ரத்தத்தை ஈடுசெய்துவிடுகிறது. ரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண், பெண் இருபாலரும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். உரிய கால இடைவெளியில் ரத்ததானம் செய்வதால் இறைக்கின்ற கிணறு ஊறுவது போல் உடலில் புதிய செல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த வங்கிகள் மற்றும் ரத்ததான முகாம்களில் ரத்ததானம் செய்யலாம்.


ஆண்டுதோறும் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ரத்ததான முகாம் அமைப்பாளர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘புதிய இந்தியா @ 75’ என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஓவியப்போட்டியும் மற்றும் இணையதள வினாடி வினாப்போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.


ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தினை ரத்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க, ரூ.175 லட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அதிநவீன 5 நடமாடும் ரத்த சேமிப்பு ஊர்திகள் (BCTV) வழங்கப்பட உள்ளது. அரிய வகை ரத்த சிவப்பணுக்களை 10 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு (Frozen Red Cell Storage Unit)அமைக்கப்பட உள்ளது.மேலும் ரத்தப் பைகளை கண்காணிக்க ரூ.2 கோடியே 8 லட்சம் செலவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிரியக்க அலைவீச்சு கருவி (Radio Frequency Identification Device) பொருத்தப்பட உள்ளது.


கடந்த ஆண்டு அரசு, தனியார் ரத்த வங்கிகள் மூலம் 90 விழுக்காடு ரத்தம் சேகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிடவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்ததானம் செய்ய முன்வர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மகிழ்வுடன் ரத்ததானம் செய்வோம், மனித உயிர்களைக் கனிவுடன் காப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via