முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.24 லட்சம் சுருட்டல்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கோட்டைக்குளத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம்,75. இவரது மகன் இளங்கோ,49, சாமியார் மடம் பகுதியில் டீக்கடை வைத்துள்ளார்.இளங்கோவின் மொபைல் போனுக்கு பேசிய மர்ம நபர், பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து பேசுவதாகவும், பழைய ஏ.டி.எம்., கார்டை புதுப்பிக்க வேண்டும், எனக் கூறி ஏ.டி.எம்., கார்டு விவரங்களை கேட்டு உள்ளார்.அதற்கு, 'என்னிடம் ஏ.டி.எம்., இல்லை; என் தந்தையிடம் ஏ.டி.எம்., உள்ளது,' எனக் கூறிய இளங்கோ, மர்ம நபருக்கு, தந்தையின் ஏ.டி.எம்., கார்டை போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து, தந்தையின் மொபைலுக்கு வந்த ஓ.டி.பி.,யையும் தெரிவித்துள்ளார்.உடனே, துரைமாணிக்கத்தின் வங்கி கணக்கில் இருந்து, 1.24 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்ட தகவல் மொபைலுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ, நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Tags :



















