மதுவிற்பனை தகவல் கொடுத்த பார்வையற்றவரை அடித்து சித்ரவதை 3 போலீசார் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கவரப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர் (வயது 29). பார்வையற்ற வாலிபர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கவரப்பட்டியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலர் அப்பகுதியில் மது விற்கப்படுவதாக சங்கரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து சங்கர் போலீஸ் கட்டுப்பாட்டுஅறை இலவச எண்ணான 100-க்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் விராலிமலை போலீசார் சிலர் சங்கரிடம் சென்று, எதுவாக இருந்தாலும் போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் புகார் அளித்திருக்கலாம், கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து இருக்க வேண்டியதில்லை என்று கூறி உள்ளனர். அப்போது போலீசாருக்கும், சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சங்கரின் வீட்டுக்கு சென்ற போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வரச்சொல்லி சங்கரை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்ததை தொடர்ந்து போலீசார் சங்கரை வீட்டில் வைத்து அடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் வைத்து சங்கரை அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் அசோக்குமார், பிரபு, செந்தில் ஆகிய 3 பேரும் லத்தியால் தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவும், சங்கரை திட்டியதாக தெரிகிறது. போலீசார் தாக்கியதில் வலி தாங்க முடியாமல் அலறிய சங்கர் போலீஸ் நிலைய வாசலிலேயே படுத்துவிட்டார். இங்கேயே இருந்தால் போலீசார் மீண்டும் தன்னை அடிப்பார்கள் என நினைத்த சங்கர் போலீஸ் நிலையத்திலிருந்து தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் படுத்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் நிலையத்திற்கு வந்த சங்கரின் தாயார் மாரியாயி, அங்கு தனது மகன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தனது மகன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் கூற மறுத்துள்ளனர்.
இதனால் மாரியாயி மகன் சங்கரை அக்கம்பக்கத்தில் தேடியபோது பிள்ளையார் கோவில் அருகே படுத்திருப்பதை கண்ட அவர் உடனே சங்கரை அழைத்து கொண்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து வக்கீலும், சமூகநல ஆர்வலருமான பழனியப்பன் என்பவர் சங்கர் கொடுத்த வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்து அதனை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பவத்தை விளக்கி கூறினார். இதையடுத்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ்காரர்கள் பிரபு, செந்தில், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையே மாற்றுத்திறனாளியை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பத்மா, அதனை தடுக்காமல் சங்கரை திட்டியது தொடர்பாக ஐ.ஜி. நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்..புதுக்கோட்டை அருகே பார்வையற்றவரை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சங்கரை தாக்கிய 3 போலீசார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

Tags : 3 policemen fired for beating and torturing a blind man who provided information on liquor sales