நகைகளை உருக்கி பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது அமைச்சர் பி.கே. சேகர் பாபு

by Editor / 03-10-2021 05:13:36pm
நகைகளை உருக்கி பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது அமைச்சர் பி.கே. சேகர் பாபு

தமிழ்நாட்டில் 1977 ம் ஆண்டு முதல் கோயில்களுக்குச் சொந்தமான தங்க நகைகளை உருக்கும் நடைமுறை இருந்தது என்று அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு இல்லத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:வள்ளலார் நினைவு இல்லத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வள்ளலாரின் புகழை ஒளிபெறச் செய்ய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து தேவைகளையும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் ‘சர்வதேச வள்ளலார் மையம்’ அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்து விரைவில் இந்த மையம் அமைக்கப்படும்.

தற்போது கோயில்களுக்குச் சொந்தமான காணிக்கை நகைகளில் பயன்படாமல் தேங்கிக் கிடக்கும் நகைகள் கணக்கிடப்படும். அவற்றில் தெய்வத்திற்கு உபயோகப்படும் நகைகளை, கோயில் வருகைப் பதிவேட்டில் உரிய சட்டப்படி பதிவு செய்து, அந்த நகைகளை தெய்வத்திற்கு உபயோகப்படுத்த திட்டமிடப்படுள்ளது.

இதில் தெய்வத்திற்கு பயன்படுத்த தேவைப்படாது என்று கருதப்படும் நகைகள், அதாவது உடைந்த, சிறு, சிறு நகைகள் மும்பையில் இருக்கும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான உருக்காலையில் உருக்கப்படும். பின்னர் அதிலிருந்து பெறப்படும் தங்கக் கட்டிகளை தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையை முழுமையாக திருப்பணிகள் மற்றும் கோயில் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் பணிகள் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். இப்பணிகளில் எந்த வகையிலும் சிறு தவறும் நடைபெறாது. இப்ணிகளுக்காக தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி என 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நீதியரசர்கள் மாலா, ரவிச்சந்திர பாபு, உச்சநீதிமன்ற நீதிபதி ராஜூ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் ஆகியோர் கோயிலுக்கு வழங்கிய எந்த நகைகளும் உருக்கப்படமாட்டாது. இத்திட்டம் திருப்பதியில் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் 1977ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாகத்தான் இப்பணிகள் நடைபெறவில்லை.பிரதமர் நரேந்திர மோடி அறங்காவலராக இருந்த சோமநாத் கோயிலிலும் இந்த நடைமுறைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இறைவனுக்குத் தந்த பொருள்களை இறைவனுக்கே பயன்படுத்த இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

இந்த திட்டத்திற்கு சிலர் கண்மூடித்தனமான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் யாருக்கு என்ன லாபம்? என்பதைக் கூறலாம். அப்படி இல்லையென்றால் கோயில் நகைகளை கோயில் பணிகளுக்குப் பயன்படுத்த ஏதாவது திட்டம் இருந்தால் கூறலாம். அப்படி இல்லாமல் நல்ல நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்.தி.மு.க. இந்துக்களுக்கு எதிரானது என்று ஒருசில இயக்கங்கள் கூறி வருகின்றன. தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இடமில்லாமல் போய்விடும் என்ற கவலை அவர்களுக்கு உள்ளது. அதனாலேயே இதுபோன்று கூறி நல்ல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கு எம்மதமும் சம்மதம் ஆகும். அனைத்து மதத்தினரும் பாதுகாப்போடு நல்ல சூழலில் இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொள்கை ஆகும். தமிழ்நாட்டில் கொரோனா பரவாது என்ற சூழல் வரும்போது கோயிலுக்குள் தினமும் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்

 

Tags :

Share via