சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

by Admin / 25-12-2021 04:58:50pm
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிவது பெரும் பிரச்சனையாகவே உள்ளது. அதுவும் சென்னை மாநகராட்சிகளிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பெரும்பாலான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இதனால், சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். 

அவ்வப்போது மாடுகள் சாலைகளில் உலா வரும் போது அங்கேயே படுத்து உறங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிலர்  சென்னை மாநகராட்சியிடம் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தனர். அதற்கு செவி சாய்த்த சென்னை மாநகராட்சி சமீபத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சுற்றி திரியும்  மாடுகளை பிடிப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியது. இதற்கிடையில் சென்னை மாநகராட்சி பதிவிட்டிருந்த டுவிட்டர் பக்கத்தில் பலரும் தங்கள் பகுதிகளிலும் மாடுகள் சுற்றித் திரிவதாகப் புகைப்படத்துடன் பல ட்வீட்களை பகிர்ந்து வருகின்றனர்.  இதற்குப் பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி, அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தபடி உரிமையாளர்களின் மாடு பிடிபட்டால் அவர்கள் அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 கட்டிவிட்டு பின் மாடுகளை கூட்டி செல்லலாம். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.

 

Tags :

Share via