பைரவர் தலம்.-வைரவன்பட்டி வைரவன் சுவாமி கோவில்

by Writer / 22-10-2021 04:33:47pm
பைரவர் தலம்.-வைரவன்பட்டி வைரவன் சுவாமி கோவில்

 

காரைக்குடி அருகில் உள்ள வைரவன்பட்டி என்ற ஊரில் உள்ளது. 500 வருட பாரம்பர்யம் கொண்டது. திருப்பத்தூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவு தூரம். இது ஒரு பைரவர் தலம்.


மேலும் நகரத்தார் திருப்பணி செய்த கோவில் 9 கோவில்களில் ஒன்று இது ஆகும். சிற்பக்கலைக்கு நல்ல முக்கியத்துவம் தந்து உருவாக்கிய தலம். ஏழிசைத்தூண் ஒன்று பிரபலமான சிற்பமாகும். நகரத்தார்களின் கோவில்களில் சாலை ஒரத்தில் இருக்கும் கோவில்கள் பிள்ளையார்பட்டி போன்றே இந்த திருத்தலமும் ஆனதால், இங்கும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்த நகரத்தார் சமுதாயம் ஏறத்தாழ 5100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகம். அனைத்து சூழ்நிலைகளிலும் ஒற்றுமையுடன் உயர்பண்புகளாலும் கடுமை உழைப்பினாலும் உயர்ந்தவர்கள். செல்லுகின்ற இடமெல்லாம் தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழ் கடவுளான முருகனையும் சிறப்பித்தவர்கள். அவர்கள் உருவாக்கியது தான் இந்த தலம்.

இந்த தலம் பற்றிய வரலாறு அறிந்த பொழுது அகந்தை அடையாமல் தன்நிலை அறிந்து நடக்க வழி செய்கிறது. முன்பு பிரம்மா ஐந்து தலைகளுடன் சிவனைப் போன்ற தோற்றத்துடன் இருந்துள்ளார். இது அவருக்கு அகந்தை ஏற்பட வழி செய்தது. இந்த நிலையில் ஒரு நாள் பார்வதி தேவி, பிரம்மாவைப் பார்த்தவுடன் சிவபெருமான் என்று எண்ணி கணவருக்கு செய்யும் மரியாதையைச் செய்தார். பிரம்மா அதற்கு மறுப்பு ஏதும் கூறாமல் இருந்தார். பின்னர் இவர் பிரம்மா என்று அறிந்த பார்வதி, சிவபெருமானிடம் இது பற்றி கூற சிவபெருமான் தனது அம்சமான பைரவரை அனுப்பி, பிரம்மாவின் ஒருதலையை கிள்ளி எறியச் செய்தாராம். அந்த பைரவரே இங்கு அருள்பாலிக்கின்றார். அகந்தை, கோபம், காமம், ஆகியவற்றை அடக்கி குற்றங்கள் இல்லாத ஆட்சியாளர்கள் பெருமை அடைவதுடன் செல்வத்துடன் புகழும் பெற்றுஎன்றும் நினைவு கூறும் வகையில் வாழ்வார்கள். எதிரிகள் பயம் நீங்கவும் கிரக தோஷங்கள் தீரவும் இங்கு வந்து வேண்டினால் நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி வேண்டுகின்றனர்.


மேலும் ராவணன் சீதையை முனிவர் வேடத்தில் வந்து இலங்கைக்கு கொண்டு சென்ற பின்னர், ஆஞ்சநேயர் இலங்கை சென்று சீதாபிராட்டியை சந்தித்து பின்னர் ராம பிரானிடம் சீதாபிராட்டி நலமாய் இருக்கிறார் என் ற நல்ல செய்தியை ஸ்ரீராம பிரானிடம் தெரிவித்து ராம பிரானுக்கு துயர் நீக்கியதை விளக்கும் விதமாக இங்கு ஆஞ்சநேயரை ஸ்ரீராமன் வணங்கிய கோலத்தில் கருவறை கோஷ்டத்தில் காட்சி தருகின்றனர். இங்கு வந்து வழிபட்டால் தான்என்ற அகந்தை அழியும் என்கின்றனர்.


மூலவரின் பெயர் வளரொளி நாதர் (வைரவன்) அன்னையின் பெயர் வடிவுடையம்பாள். அம்பாள் சன்னதிக்கும் முன்னர், பைரவர் தனிச் சன்னதியில், வலது பக்கமாய் திரும்பிய நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். இந்த தலத்தின் பிரதானமூரத்தியான பைரவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் இங்கு உள்ளது. இதில் நீராடி பைரவரை மனம் ஒன்றி வணங்கிட எதிரிகள் பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சகல வித நோய்களும் தீரும் என நம்புகின்றனர்.


முன்னர் உள்ள வடிவுடையம்பாள் சன்னதியில் அம்பாள் அம்சமாக காட்சி தருகிறார். இவரது பின்புறம் இரண்டு பல்லி சிறபங்கள் தத்ரூபமாக வடித்துள்ளனர். இதனை வணங்க தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். தல விருட்சம் ஏர் அளிஞ்சி ஆகும்.
சிறப்பக்கலையை ரசிக்கும்படி ஏழிசைத் தூண் மண்டபம் உள்ளது. அதில் தட்டினால் விதம் விதமாக ஒலி எழும்புகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.


மேலும் சண்டிகேஸ்வரருக்கு ஒரே பாறையில் உருவாக்கிய குடவரைக் கோவில் போன்று காட்சி தருவது பிரமிக்க வைக்கிறது. நந்தி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கின்றார். இங்கு போருக்குச் செல்லும் வீரன் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற தத்ரூபமான சிலை அருமையாக உள்ளது.


ஐந்து நிலை கொண்ட கோபுரம் நிமிர்ந்து நிற்கின்றது. வீரவொளி விநாயகர் அருள்பாலித்து அனைவருக்கும் ஆசி வழங்குகிறார். தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்து ஐந்து கால பூஜைகள் சிறப்புடன் நடைபெறுகின்றது. காலையில் கோ பூஜை தவறாமல் நடைபெறுவது காணுதற்கரிய காட்சியாகும்.
முக்கிய விழாக்களாக பைரவர் சம்பகசூரனை வதம் செய்ததின் நினைவாக கார்த்திகை மாதம் சம்பக சூரசஷ்டி விழாவும் ஆடிப்பெருக்கை ஒட்டி 11 நாள் திருவிழாவாக காப்பு கட்டி, பூப்பல்லாக்கு, திருக்கல்யாணம், திருத்தேர் வருதல் ஆகியவையும் நவராத்திரி ஒன்பது நாட்களும் மார்கழி மாதம் பிள்ளையாருக்கு நகரத்தார் விழாவும் மற்றும் தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.


இந்தத் திருத்தலம் பூலாங்குறிச்சி தலைவர் பழனியப்ப செட்டியார் நிர்வாகத்தின் கீழ் முத்துகருப்பன் பராமரிப்பிலும் நன்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் இத்தலத்திலேயே தங்குவதற்கும் குடில்கள் உண்டு. இவைகளில் தற்சமயம் கட்டுமானப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via