மாறாதது சமூகம் மட்டுமல்ல நாமும் தான்
கற்பப்பை உறவு என்பது உன்னதமானது.. அது தாய்வழி மகன் – மகளாக இருக்கலாம்…. இல்லை, சகோதர சகோதரியாக இருக்கலாம்…
யாரும் விரும்பியோ விரும்பாமலோ இன்னார் வயிற்றில் பிறப்பேன் என்றோ… இவள் வயிற்றில் பிறக்க மாட்டேன் என்றோ சத்தியம் செய்து பிறப்பதில்லை… ஆண் – பெண் கலப்பினால் ஒரு ஜீவன் மலரும் என்பது உண்மை….? ஆனால், அம்மழலை எப்படிப் பிறக்கும் என்பது யாரும் அறியாத ரகசியம்.. புரியாத புதிர்..
ஆண் – பெண்ணாக அழகாக… சகல சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய குழந்தைகளும் பிறக்கின்றனர். கருப்பாய், உயரம் குறைந்து, கண் இன்றி – கால் – கை சூம்பி போய்… காது கேளாமல், வாய் பேச முடியாமல், ஆணுமின்றி – பெண்ணுமின்றி இரண்டுங் கெட்டானாக – ஆட்டிச பிரச்சனையோடு மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாகப் பிறக்கின்றன… இவைகளை யார் விரும்பி பெற்றார்கள்… அழகாக இருக்கும் குழந்தைகள் என்றால் நான் தவமாய் தவம்கிடந்து பெற்ற பிள்ளை என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.. குறைபாட்டோ பிறந்த குழந்தைகளை சாபத்தின் விளைச்சல் என்று தானே சொல்கிறோம்….
இந்தக் குழந்தைகளையும் தவமிருந்து பெற்றதாகக் கொண்டாட மனம் வருகிறதா?.. வருவதில்லை… வலிக்கும் மனசு…. கூட்டிக் கழித்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் மனித குலம்…
உடல் ஊனமான – மூளை வளர்ச்சியின்றி பிறந்தாலும் அது ஆணாகவோ – பெண்ணாகவோ பிறந்து விடுகிறது.. அதைப்பற்றி பெற்றோருக்குப் பெரிதாகக் கவலையில்லை…
ஆனால், ஆணுமின்றி – பெண்ணுமின்றி பிறந்தவர்களை ஏன்…? பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோ நிலைக்கு வரத் தயங்குகிறார்கள்…சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்று அவர்களை வீட்டை விட்டே துரத்திவிடுகிறது…பத்து – பன்னிரண்டு வயது வரை தம்மோடு இருந்த ஜீவன்… திடீரென்று உடல் மாறுபட்டு அடைந்தால் அந்த பேதைகள் என்ற செய்யும்… வீட்டிலிருக்கிற மற்றவர்களுக்குத் திருமணம் ஆகாது என்று துரத்தி விடுகிறார்கள்.
சமீபத்தில் தம் தம்பி பெண் போன்று மாறுகிறான் என்பதற்காக அண்ணன்காரன் கத்தியால் குத்தி சாகடித்த கொடூரம்.. நம்மிடம் தானே நடந்தேறியிருக்கிறது…
விழுப்புரம் கூலாகம்… சாபத்தின் மொத்த விளைச்சல் பூமியாக ஒருநாள் திருவிழாவில் காணமுடியாது…
திருநங்கைகள்…. செய்த பாவம் தான் என்ன…? விரும்பியா? அந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டார்கள்… சமூக அங்கரீப்பு இல்லாமல் அல்லாடும் அவர்கள் போதிய வருமானமின்றி அவலமான உடல்சார் கேவலமான தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்…
ஊர் உலகத்திற்காகத் துரத்திவிட்ட அந்த திருநங்கை குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று எந்தப் பெற்றோராவது கவலை பட்டிருக்கிறார்களா…?
மானம் என்ற கிரீடம் சூட்டிக் கொண்டு வாழும் போலி சமூகத்தில் வசிக்கும் பெற்றோர்கள்…. அறிந்திருப்பார்களா..? அந்த ஜீவன்கள் உயிர்வாழ எப்படிச் சாப்பிடுகிறார்கள். உடுத்திக் கொள்ளவும் உறங்கிக் கொள்ள உறைவிட தேவைக்கு… என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று…
நம் வயிற்றில் பிறந்ததது தானே…? என்கிற இரக்கம் அற்று துரத்திவிடுகிற போக்கு எப்பொழுது நிற்கும்… மானம்… மானம் என்று நீங்கள் சொன்ன மானத்தை அந்த ஜீவன்கள் வயிற்றுக்காக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்….
ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் சமூகத்தில் மேல் நிலைக்கு வரவில்லை…வரவும் விட மாட்டார்கள்… சினிமாவிலும் தொலைக்காட்சி விளம்பரத்திலும் பத்திரிகை பேட்டியிலும் அவர்களை அங்கீகரிப்பதாக – உயர்த்துவதாகச் சொன்னவர்கள்…மறுநாள் மறந்து போயிருப்பார்கள் அந்த பாவபட்ட, அவமானப்பட்ட ஜீவன்களை.. முன்பிருந்த சமூகத்தைவிட இன்று கேலியும் கிண்டலும் குறைந்து வேண்டுமானால் போயிருக்கலாம்…
வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா? தினந்தோறும் படுகிறபாடு குறைந்திருக்கிறதா..? கடை கடையாய் ஏறி… கைத்தட்டி…பாட்டுப்பாடி… கேலி பேச்சும் கிண்டலும் தந்த வலி மறந்து… கிடைத்த கௌரவ பிச்சை காசில் வயிரு வளர்த்து வாழ்த்து வருவதைப் பார்க்க மனம் துடிக்கவில்லையா…?
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது…அதிலும் கூன், குருடு, பேடு நீக்கி பிடித்தல் அரிது… மனிதராகப் பிறந்தாலும் அவர்களின் வம்சம் விருத்தியாவதற்குரிய ஆற்றல் ஆணாகப் பிறந்தவரிடமோ பெண்ணாகப் பிறந்தவரிடமோ இருக்க வேண்டும்…. அப்படி இல்லையெனில் அவர்கள் மானிட பதராகவே உலகம் கருதும்; கருதுகிறது.
மாட்டில் கூட பசுங்குட்டியை விரும்புகிற நாம் காளை கன்றை விரும்புவதில்லையே… எல்லாம் பலன் பார்த்தே பழக்கப்பட்ட சமூக அமைப்பு. அப்படித்தான் தம் புத்தியை இறுக்கமாக வைத்துள்ளது… சமீபத்தில் ஒரு நடிகர் தம் மகன் ஆட்டிசத்தில் பிறந்து விட்டான் என்பதற்காக பல வருடம் வேதனைப்பட்டதாகவும் தற்போது அந்த பையனுக்கு இருபத்து ஐந்து ஆனாலும் அவள் கடைசி வரை எங்களுடனே இருப்பார் எங்களைவிட்டு பிரியாத குழந்தை என்று சொன்னார்.. மன மாற்றம்.. பிறப்பில் ஏற்பட்ட பிழைக்கு அந்தக் குழந்தை என்ன பொறுப்பேற்க இயலும்… நாம் தான் மனம் திருந்த வேண்டும்.. இல்லை, பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அர்த்தநாரீஸ்வராக இருக்கும் கடவுளை எற்றுக் கொள்கிறோம்..அரக்கர்களை அழிக்க மோகினி வடிவம் எடுத்து வருவதை கொண்டாடுகிறோம்… ஆனால், நிஜத்தில், நம்மில் ஒருவராக ஆணுமற்று பெண்ணுமற்று பிறந்த குழந்தைகளை நாமும் கொல்கிறோம்… சமூகமும் நிராதாரவாக விட்டு உயிரோடு கொல்கிறது…
Tags :