13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி தங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அமெரிக்க படை சுற்றி வளைத்த போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி, தனது குடும்பத்தினருடன் அந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்தார்.
அமெரிக்க படையினரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த அவர், குடும்பத்தைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி அவர் தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த தாக்குதலில் கட்டிடம் கடும் சேதம் அடைந்தது. அந்த கட்டிடத்தில் அமெரிக்க படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.
ஈராக்கின் மொசூல் உள்பட பல்வேறு நகரங்களிலும், சிஞ்சார் மலைப்பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்பு படையினரையும், பொது மக்களையும் கொடூரமாக கொன்றனர்.
இதையடுத்து அப்போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளை ஈராக் படையினர் மீட்டனர்.
சிரியாவிலும், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு படையினர் பயங்கரவாதிகளை விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும் பயங்கரவாதிகள் தலை தூக்க தொடங்கினர்.
இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க படை தாக்குதலின் போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தலைவர்களும் ஒரே மாதிரி குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :