ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

by Admin / 04-02-2022 04:26:49pm
 ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

பெத்தேல் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். தமிழக அரசு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது.
 
வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருவதாகவும், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவிகளும் வழங்கப்படுகிறது.

வீடுகளுக்கு பட்டா கோரி அரசுக்கு விண்ணப்பித்த நிலையில், 15 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவும் பிறப்பித்தது.அதன் பின் பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதால், மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், எங்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். அரசின் மக்கள் நல திட்டப்படி பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்பதால் இந்த இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், தற்போதைய இடத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான மனுதாரர் சங்க கோரிக்கையை அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்று கூறினார்

இதுகுறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பு வக்கீல் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

Tags :

Share via