சென்னையில் பஸ்சில் ஏறி திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்

by Editor / 23-10-2021 03:18:04pm
சென்னையில் பஸ்சில் ஏறி திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்

சென்னையில் அரசு பஸ்சில் திடீரென ஏறி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை துரைபாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின்  ஆய்வு செய்தார். தொடர்ந்து எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று கேட்டார்.


பின்னர், சென்னை தி.நகரில் இருந்து கண்ணகி நகர் வந்த 19பி பஸ்சில் ஏறி, ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, சரியான நேரத்திற்கு பஸ்கள் வருகிறதா?, போதுமான வசதி உள்ளதா?, கூடுதல் வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா? என்பதையும், பெண்கள் இலவச பஸ் சேவை, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஸ்டாலின் ஒவ்வொருவரின் இருக்கைக்கும் சென்று கேட்டறிந்தார்.


முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் என அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கங்கே திடீரென அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் வெளியூர் சென்றபோது ஒரு இடத்தில் காவல் நிலையத்திற்கு சென்றும், மற்றொரு இடத்தில் ஆதிதிராவிட மாணவர் விடுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். வயலில் வேலை செய்த பெண்களிடம் வயலில் இறங்கி குறைகளை கேட்டார்.

தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் அவரது அலுவலகத்திற்கு எதிரே இருந்த வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் சென்றபோது வழியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அதேபோன்று வாக்கிங் சென்றபோதும் அங்கு வாக்கிங் சென்றவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டார்.

 

Tags :

Share via