ஆப்கானை விட்டு வெளியேற  மறுக்கும் இந்து அர்ச்சகர்

by Editor / 17-08-2021 05:06:37pm
ஆப்கானை விட்டு வெளியேற  மறுக்கும் இந்து அர்ச்சகர்



ஆப்கானிஸ்தானை விட்டு பலரும் வெளியேறிவரும் நிலையில், தாலிபான்கள் கொன்றாலும் தான் நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என அந்நாட்டின் கடைசி இந்து அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான் வசம் போயுள்ள நிலையில், பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மத சிறுபான்மையினரும் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளனர். எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட வேண்டும் என பலரும் தவித்துவரும் நிலையில், தனது உயிரே போனாலும் அந்நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என இந்து அர்ச்சகரான பண்டிதர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


பரத்வாஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ' காபூலில் உள்ள ரட்டன் நாத் கோயிலின் அர்ச்சகராக உள்ள பண்டிதர் ராஜேஷ் குமார், 'காபூலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதற்காக உதவிகள் செய்வதாகவும் சில இந்துகள் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் என்னுடைய முன்னோர்கள் இந்த கோவிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சேவை ஆற்றியுள்ளனர். நான் அதை கைவிட மாட்டேன். தாலிபான்கள் என்னை கொன்றாலும், எனது சேவையாகவே அதை கருதுவேன்' என்று தெரிவுள்ளார்' என பதிவிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் காபூல் நகரில் உள்ள குருதுவார் ஒன்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதனிடையே, ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினராக உள்ள இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வரலாம் என்றும் உதவிகள் செய்யப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via