எல்லிஸ் டங்கன்

எல்லிஸ் ஆர். டங்கன் பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஓர் அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.
டங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் 1909 மே 11 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்.
கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுநர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.
இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்.

Tags :