தமிழகத்தில் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம்

by Editor / 05-03-2022 08:11:33am
தமிழகத்தில் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம்

ஸ்ரீ கால பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் தனித் தனிக் கோயில்கள் அமைந்துள்ளன. காசிக்குச் செல்லும் பக்தர்கள் அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தி லிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்தத் தலம். இங்கே, அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோயிலில்  தனித்தனிச் சந்நிதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள். இக்கோயிலின் தலவரலாறு மகத்துவமானது.
எதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு! - சரபசூலினி சந்நிதியில்...
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி
பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவமியற்ற விரும்பினார். அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவமியற்றுவதற்குச் சிவபெருமான் அனுமதிக்கவில்லை. இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார். சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்குச் சென்று, அந்தத் தலத்திலுள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து ஆயிரம் பௌர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெரும்பேறும் கிடைத்து.
எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்
சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப் புற இறக்கையிலிருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.
இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்டபைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்  இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.
குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்னைகள் நீங்கிக்  குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபடவேண்டும்.
சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர்.  காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளிலிருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.
 குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.
உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.
கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டி மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி- அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.
பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.
 சம்ஹார பைரவர்:  நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர்.  பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை - சனி புக்தி  மற்றும் ராகு திசை - ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
எலுமிச்சை உத்தரவு!
இந்தத் தலத்தின் பிரார்த்தனைச் சிறப்புகள் குறித்து இக்கோயிலில் பூஜைகள் செய்து வரும் கண்ணன் குருக்களிடம் கேட்டோம்.
‘`இங்கு பெளர்ணமிதோறும் மாலை ஐந்து மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியிலிருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தல மிது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதிகம்’’ என்றார்.
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

எப்படிச் செல்வது?: கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ராகு தலத்திலிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பிளாஞ்சேரி அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். திருநாகேஸ்வரத் திலிருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 8 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 8 மணி வரை.

 

Tags :

Share via