இந்திய வில்வித்தை அணியில் தீபிகா குமாரி இடம்பெறவில்லை

by Staff / 29-03-2022 01:12:39pm
இந்திய வில்வித்தை அணியில் தீபிகா குமாரி இடம்பெறவில்லை

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய வில்வித்தை அணி தேர்வுக்கான தகுதி சுற்று போட்டிகள் அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள சாய் மையத்தில் நடந்தது. 

இதில் இறுதி தகுதி சுற்றில் 3 ரவுண்டுகளில் இரண்டில் தோல்வியை சந்தித்த உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். 

2010-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் தீபிகா குமாரி முதல்முறையாக அந்த போட்டியை தவறவிடுகிறார். ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் அதற்கு முன்பு நடைபெறும் மூன்று உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தருண்தீப் ராய், ஜெயந்தா தலுத்கர், நீரஜ் சவுகான், சச்சின் குப்தா (ஆண்கள் ரிகர்வ் பிரிவு), ரிதி ஹோர், கோமளிகா பாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் (பெண்கள் ரிகர்வ் பிரிவு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஜூலை மாதத்தில் மீண்டும் ஒரு முறை தகுதி சுற்று போட்டி நடத்தப்படும். அதில் தீபிகா குமாரி மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும்.

 

Tags :

Share via