இங்கிலாந்து பிரதமர் 3வது திருமணம்!

by Editor / 31-05-2021 07:28:11am
இங்கிலாந்து பிரதமர் 3வது திருமணம்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை நேற்று முன்தினம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது போரிஸ் ஜான்சனுக்கு மூன்றாவது திருமணமாகும். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இவரது காதலி கேரி சைமண்ட்ஸ்(33). கடந்த 2019ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆனதில் இருந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் 2022ம் ஆண்டு ஜூலையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கான அழைப்பிதழ்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்சை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். நேற்றுமுன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் வெஸ்ட் மினிஸ்டர் கத்தோலிக்க தேவாலயம் திடீரென மூடப்பட்டது. அரைமணி நேரத்துக்கு பின் சைமண்ட் வெள்ளை நிற திருமண உடையில் வந்திறங்கினார்.
கடைசி நேரத்தில் விருந்தினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் தொற்று விதிமுறைகள் காரணமாக திருமண விழாக்களில் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் போரிஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்தும் செய்துள்ளார். அவரது இரண்டாவது மனைவி வழக்கறிஞர் மரினா வீலர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த திருமணம் குறித்த செய்தியை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via