முக்கிய நிகழ்வுகள்

by Editor / 14-07-2022 11:33:23am
முக்கிய நிகழ்வுகள்

 1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி 
MP 3 (டிஜிட்டல் ஆடியோக்கான ஆடியோ குறியீடு) பெயரிடப்பட்டது.

 1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் 1856 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாதாரா மாவட்டத்தின் கராட் தாலுக்காவில் டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார்.

1914 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார் நியூ இந்தியா என்ற பத்திரிகையை தொடங்கினார்.

2004ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் துறவி சுவாமி கல்யாண் தேவ் மறைந்தார்.


நினைவு நாள் :-

எம்.எஸ்.விஸ்வநாதன்
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.

1953ல் வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.

 கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

 லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் தனது 87வது வயதில் 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

வா.செ.குழந்தைசாமி

 இந்திய பொறியாளர் வா.செ.குழந்தைசாமி 1929ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் பிறந்தார்.

நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத்துறை திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

 தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

 சர்வதேச தொலைநிலைக் கல்வி குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத்தலைவராக பணியாற்றியுள்ளார். 

 நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர்.

பன்முக ஆளுமை திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி தனது 87வது வயதில் (2016) மறைந்தார்.

 

Tags :

Share via