அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம்: முதல்வர்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 03) முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது:
"தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாச பண்டிதர். 1891-ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1891-ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை ஆகும். 1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழைத் தொடங்கி அதையே 'தமிழன்' என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர்.
பூர்வீக சாதி, பேதமற்றவர்கள் திராவிடர்கள் என அழைத்தவர் அவர். அதனால்தான், தமிழன், திராவிடம் என இரு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தினார் எனக் குறிப்பிட்டேன். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது.
எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றலைக் கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர்.
அவரது தாத்தா கந்தப்பன், தன்னிடமிருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை எல்லீஸிடம் கொடுத்து திருக்குறளை அச்சுப் பதிப்பாகக் கொண்டுவந்ததை நினைக்கும்போது, குறளுக்கு அவர் குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.
பெரியாரே, என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அவர் சொன்னதைத் தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதி, மதமே தடை எனச் சொன்னவர் அவர். மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்.
1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175-ம் ஆண்டின் நினைவாக, அவரது அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது. புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' என்று சொன்ன அயோதித்தாசரின் சிந்தனையும் இரவு பகலற்ற ஒளியாக இந்தச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்"இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Tags :