இறந்து 10 வருடம் ஆன நபர் தடுப்பூசி போட்டுகொண்டதாக குறுஞ்செய்தி!- அதிர்ச்சியில் குஜராத் மக்கள்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். ஆனால் போதிய தடுப்பூசி தற்போது இல்லை. எனவே மத்திய அரசு விரைந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தடுப்பூசி போடும் போது பல்வேறு குளறுபடிகள் நடப்பது வழக்கம்தான். அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நட்வர்லால் தேசாய் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு தனது 93 வயதில் உயிரிழந்தார்.
அவர் இறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவரது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. அதைப்பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :