..அம்மாவின் வலி ..அம்மாவுக்கு மட்டும் தான் புரியும்.
வலியின் வீரியம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் அப்பா என்கிற ஆளுமையின் மரணம் தந்த வலி சொல்லி மாளாது. அப்பாவின்றி அம்மாவின் தனிமை. கடைசி காலத்தில் புரிந்து நேசித்த இருபத்து நான்கு மணி நேரமும் விட்டுப்பிரியாத நேசத்தின் இழப்பு தந்த வலியில் புலம்பல்களாக வந்து விழுந்த சொற்களின் தகிப்பை தாங்கமாட்டாத இறுதிகால அந்நியோன்ய பரிவு அவளை அடித்து துவைத்த துணியாக கசக்கி பிழிந்து போட்டிருந்தது.எப்படி தாங்குவாள் .பதினாறு வயதில் தொங்க தொங்க கட்டிய தாலியோடு பட்டினத்து வாழ்க்கை..படித்தவர் பதவியில் இருப்பவர் என்று சொல்லி சொல்லி..அவரின் பெருமையை உயர்த்தி அம்மா என்கிற மனுசிக்கென்று எதுவும் இல்லா ஒரு நிழல் வாழ்கையை வாழ வைத்து..பிள்ளை பெற்று..அதற்காகவே வாழ்ந்து ..அதுகளும் தனக்குரிய வாழ்கை இங்கே இல்லை என்று பறந்து போய் ..மூன்று ஆண்டுக்கொருமுறை வந்து பா ர்த்துப்பேசி ..சிறகை விாித்து பறந்து போன போது அப்பா என்கிற மனிதர் ஒய்வு நிலைக்கு வந்தார்.அடுப்பில் காய்ந்த பாத்திரம் இறக்கி வைத்த பின்பும் கொஞ்சநேரம் சூடு இருப்பது போல அப்பா பதவியின் சூட்டிலே ஒராண்டு கழிந்த பின்பு தான் அம்மா என்கிற மனுசியோடு மனத்தளவில் ஒன்ற ஆரம்பித்தார். இப்படி கடைசி காலத்தில் வாழ நினைக்கையில் அவரும் பாதியிலே விட்டுப்போன து. நாங்களும்
எங்களுக்கான வாழ்க்கை தேடலில் பயணப்பட்டது. எல்லாமாக அம்மாவின் வலியை அதிகப்படுத்தி விட்டது .யாருமில்லா தனிமை .கணவனுக்காக. . பிள்ளகைளுக்காக ..பேரன்,பேத்திகளுக்காக பெரும் காலத்தை சந்தோஷம் கலந்த சங்கடத்தில் வாழந்து பழகியவளுக்கு இன்று யாருமற்ற..எந்தவித கடமையுமற்ற வாழ்கை தந்த வலியில் துடித்து புலம்பி கொண்டிருக்கிறாள்.அவள் வலி.அவளால் மட்டுமே உணரமுடியும் .எல்லோரும் உடனுறைந்து வாழ்ந்த வாழ்க்கை முடங்கி போன போதே ..அவளும் முடங்கிப் போனாள்...அம்மாவின் வலி ..அம்மாவுக்கு மட்டும் தான் புரியும்.
Tags :