நவீன இத்தாலியின் தந்தை கரிபால்டி

by Editor / 24-07-2021 06:19:10pm
நவீன இத்தாலியின் தந்தை கரிபால்டி

 

நவீன இத்தாலியின் தந்தையும், ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவருமான ஜுஸபே கரிபால்டி ( பிறந்த தினம் (ஜூலை 4).:
பிரான்ஸின் நைஸ் நகரில் (1807) பிறந்தார். மீனவரான தந்தை, துறைமுக வியாபாரியாகவும் இருந்தார். மாலுமியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார் கரிபால்டி. அப்போது இத்தாலியின் பகுதிகள் பல்வேறு நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தன.

ஒருமுறை ரஷ்யாவுக்கு கப்பலில் சென்றபோது இத்தாலியை விடுவிப்பதில் முக்கியப் பங்காற்றிய மாஜினியின் நட்பை பெற்றார்.‘கார்போனரி’ என்ற ரகசிய புரட்சிப் படையுடன் இணைந்து போராடினார். ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்தார். இத்தாலியப் புரட்சிக்கு மாஜினி ஆன்மாவாகவும், காவூர் அறிவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும் திகழ்ந்தனர்.


ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதால் பிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு துனிசியா, பிரேசில், தென் அமெரிக்காவுக்கு சென்றார். உருகுவே நாட்டில் இத்தாலிப் படையை நிர்மாணித்தார். பல போராட்டங்கள், சண்டைகளில் பங்கேற்றார். மானுவேல் ரோசஸ் என்ற சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்களுக்கு உதவினார்.
விவசாயத் தொழிலாளியாக பல ஆண்டுகள் வாழ்க்கையை ஓட்டினார். வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் தாய்நாடு அடிமைப்பட்டிருப்பது இவரை வேதனையில் ஆழ்த்தியது.


மீண்டும் இத்தாலிக்கு 1848-ல் திரும்பியவர், தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். முதல் இத்தாலிய சுதந்திரப் போரில் ராணுவத்துக்கு தலைமை தாங்கினார். பிரான்ஸ் படை அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினார்.


நாட்டைவிட்டு வெளியேறி நியூயார்க் சென்றார். 1854-ல் மீண்டும் இத்தாலிக்குத் திரும்பினார். 1859-ல் நடந்த 2-வது இத்தாலிய சுதந்திரப் போரில் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1860-ல் நடந்த சண்டையில் சிறு படையுடன் சென்று நெப்போலியன் படைகளை வென்று சிசிலியைக் கைப்பற்றினார். இத்தாலியின் நாயகனாகப் போற்றப்பட்டார். அசாதாரண ராணுவத் திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் அனைத்தும் ஒருங்கே பெற்றவர்.
‘‘வாருங்கள், என் படையில் சேருங்கள்! வீரமுரசு முழங்கும்போது வீட்டுக்குள் இருப்பவன் கோழை. ஒன்று.. வெல்வோம். அல்லது வீழ்வோம்’’ - என்ற இவரது வீர முழக்கம், இத்தாலிய இளைஞர்களை வீதிகளில் திரண்டு போராட வைத்தது. இவரது ‘இளம் இத்தாலி இயக்கம்’ இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.


 ‘தேசம் என்பது வெறும் எல்லைக்கோடு, மண், கட்டிடங்கள் மட்டுமே அல்ல. மக்களின் உணர்வுடன் கலந்த மாபெரும் கருத்தாக்கம். அவர்களின் உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு’ என்றார்.


இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர், ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் ‘ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்’ என்று போற்றப்பட்டார். தலைசிறந்த ராஜதந்திரியாக விளங்கிய கரிபால்டி 74 வயதில் மறைந்தார்.

 

Tags :

Share via