தொடர்ந்து போராட்டம், அவமானம், எரிச்சல் - கவிஞர் தாமரை 

by Editor / 24-07-2021 06:44:49pm
தொடர்ந்து போராட்டம், அவமானம், எரிச்சல் - கவிஞர் தாமரை 


எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர்.
சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். எட்டாம் வகுப்புல கவிதைகள் எழுத ஆரம்பிச்சிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சு பொறியியல் சேர்ந்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் பத் திரிகைகளுக்கு கவிதை அனுப்ப ஆரம்பிச்சேன்.

அப்பவே படங்களுக்கு பாடல் எழுதணும்னு கொள்ளை ஆசை. ஆனால், அதற்கான முயற்சி செய்யலை. ஏனென்றால் நான், என் தங்கை, என் அண்ணன் எல்லாருமே பொறியியல் படித்துக் கொண்டிருந்தோம். என் பெற்றோர் ஒரு கட்டத்துல திணறிட்டாங்க. நான் உடனடியாக படிப்பை முடிச்சிட்டு வேலைக்குப் போக வேண்டியிருந்தது. கல்லூரி இறுதித் தேர்வுக்கு முன்பே வேலை கிடைத்துவிட்டது. கொதிகலன்கள் செய்யக் கூடிய பெரிய தொழிற்சாலை அது. இருபத்தியோரு வயசுல வேலைக்குச் சேர்ந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு அதே வேலைதான். அப்போதான் என் கதைகள்லாம் பிரசுரம் ஆச்சு.

இருபத்தியாறு வயசுல எனக்குத் திருமணம். என்னுடன் படித்தவர்தான். ரொம்ப சிக்கலான திருமணம். ஒரு சராசரி நடுத்தரவர்க்க இந்திய ஆண் எப்படி இருப்பாரோ அப்படித்தான் என் கணவரும். தான் தன் முன்னேற்றம் அவ்வளவுதான். மனைவி என்பவள் மனுசி இ ல்லை. காலையில் ஆறரை மணிக்கு நான் வேலைக்குக் கிளம்பணும். இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி மலுமிச்சம்பட்டிக்குப் போகணும். மாலை வீடு திரும்ப எட்டு, ஒன்பது மணி கூட ஆகும். கடுமையான வேலை. இத்தனை உழைச்சும் அதனால எனக்கு என்ன பயன்னே தெரியலை. கிட்டத்தட்ட சாவு வரைக்கும் என்னை இந்தத் திருமணம் கொண்டு போய் தள்ளிடுச்சு.

ஒரு கட்டத்துல இனி வாழ்க்கையில எனக்காக எதையாவது செய்தாகணும், அடுத்தவங்களை அனுசரிச்சு அனுசரிச்சு எல்லாத்தையும் இழந்துட்டோம்ன்னு முடிவு பண்ணி தைரியமா வேலையை உதறிட்டேன். பணம் எல்லாம் என் கணவரிடம். என் பெற்றோர் எனக்குக் கொடுத்த நிலத்தையும் கொடுக்கவில்லை. அந்த இடத்துல அவர் தொழிலகம் அமைச்சுக்கிட்டாரு. அவர் வாங்கின கடன்களுக்கு நான் கையெழுத்துப் போட்டிருக்கேன். இந்த சமயத்துல அவரு எனக்குத் தெரியாம இரண்டாவது கல் யாணம் பண்ணிக்கிட்டார். ரொம்ப ரகசியமா வைச்சிருந்தாங்க.
விவாகரத்து கேட்டாலும் கொடுக்க மாட்டேங்குறார். விவாகரத்து கொடுத்தால் என் இடத்தை திரும்பக் கொடுக்கணும், கடன்களை கட்டணும், எனக்குத் தீர்வு செய்யணும் இல்லையா....? என்ன ஒரு சுயநலம்...!
அந்த முதல் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்திருந்தால் நான் பாடலாசிரியர் ஆகியிருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்தத் திருமணப் பிரச்னைக்குப்பிறகு நான் மீண்டும் எழுதத் தொடங்கினேன். திரைப்பட பாடல் முயற்சிகளில் இறங்கினேன். 97-ல் சென்னைக்கு வந்தேன்.
இளையராஜா, தேவா, ஆதித்யன்னு இசையமைப்பாளர்களை தேடிப் போய் வாய்ப்புக் கேட்டேன். ஆதித்யன் ஒரு ஆங்கிலப் பாடல் கொடுத்து தமிழில் எழுத வைச்சார். என் எழுத்தைப் பார்த்த பிறகு ‘உங்கிட்ட ஏதோ விஷயம் இருக்கும்மா..’ன்னு பாராட்டினார். அப்போதான் மெட்டுக்கு பாட்டு எழுத முடியும்ன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.


கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்துல ஒரு வீட்டு மாடியில் தனியாக அறை எடுத்துத் தங்கினேன். சொற்ப சேமிப்பு பணம், படிப்பு, ‘பெண் என்றால் கிள்ளுக்கீரையா....’ என்ற கோப ஆவேசம். இவைதான் உடன் வந்தன. ஒரு டி.வி.எஸ். 50 வண்டியை வைத்துக் கொண்டு இயக்குநர்களின் அலுவலகங்கள், இசையமைப்பாளர்களின் ஒலிக் கூடங்கள்ன்னு வாய்ப்புத் தேட ஆரம்பிச்சேன். சலிக்காமல் தெருத் தெருவாக வெறியோடு அலைந்தேன்.


அந்த சமயம் கோவையிலிருந்து மனோகர்னு ஒரு நண்பர் தொலைபேசி செய்து அவருடைய நண்பரான மோகனை சந்திக்கச் சொன்னார். இரண்டு பேரையுமே நான் பார்த்தது கிடையாது. மோகன் என்னை இயக்குநர் சீமானிடம் அறிமுகம் செய்து வைத்தார். சீமான் அப்போது ‘இனியவளே...’ பட இயக்கத்திலிருந்தார். அந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தார்.


‘தென்றல் எந்தன் நடையை கேட்டது...’ இதுதான் நான் சினிமாவுக்காக எழுதின முதல் பாடலின் முதல் வரிகள்.
இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சிலாகித்த சுசீந்தரன் ரவி என்ற உதவி இயக்குநர் மூலமாக இயக்குநர் விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் இரண்டாவது பாடல் வாய்ப்பு வந்தது. அடுத்த வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கவில்லை.
தொடர்ந்து போராட்டம்தான். அவமானம், எரிச்சல், கோபம் எல்லாமே இருக்கத்தான் செய்யும். ஆனாலும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்து கொண்டேதான் இருந்தேன்.


1997-ல் முதல் வாய்ப்புக் கிடைத்தது துவங்கி 2002-ல் இயக்குநர் கௌதமின் ‘மின்னலே’ வுக்காக ‘வசீகரா...’ எழுதும் வரை பெரிய போராட்டம்தான். அதன்பின்தான் என் திரையுலகப் பாதையில் திருப்புமுனை ஏற்பட்டது.


இந்தப் பதின்மூன்று வருடங்களில் ஐநூறு பாடல்கள் எழுதியிருப்பேன். ‘மோசமான பாடல்கள், சமூகத்தைக் கெடுக்குற மாதிரி பாடல் எழுதமாட்டேன், அதில் சில ஆங்கில வார்த்தைகள் கலக்க மாட்டேன்’னு கொள்கைகளினால் நான் இழந்த பாடல்கள் ரொம்ப அதிகம். பல இடங்களில் பாட்டெழுதியதற்கு பணமே கொடுக்க மாட் டாங்க. அப்புறம் தருகிறேன் என அலைக்கழிப்பார்கள். என்னுடைய முதல் பாடலுக்கு கூட சம்பளம் கிடையாது. விக்ரமனின் இரண்டாவது பாடலுக்குத்தான் மூவாயிரம் சம்பளம் கிடைத்தது. பாட்டுக்கான என்னுடைய முதல் சம்பளம் அது.


திரைப்படம் பெரிய போதை. ஆனா, திரைப்படக் கவர்ச்சியில ஒரு போதும் நான் விழவில்லை. இதான் என் வெற்றிக்குக் காரணம். நான் இங்கே பணம் சம்பாதிப்பதற்காகவோ, புகழுக்காகவோ வரவில்லை. எனக்கு ஒரு வேலை வேணும். நியாயமான, நாகரிகமான, மனதுக்குப் பிடித்ததாக இருக்கணும், அதன் மூலம் சமூகச் சிக்கல்களில் என் குரல் ஓங்கி ஒலிக்கணும். தமிழினத்தின் உரிமைப் போராட்ட வரலாற்றில் என் பெயரும் இருக்கணும். அவ்வளவுதான்.’’ என்று முடிக்கிறார் தாமரை.

courtesy -noyyal  media 

 

Tags :

Share via