மாணவனை தலை கீழாக தொங்கவிட்ட பள்ளி முதல்வர்... நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு...
உத்திரபிரதேசத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவனை மேல் தளத்தில் இருந்து தலைக்கீழாக தொங்கவிட்ட சம்பவம், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த மாணவன் வகுப்பறையில் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளி முதல்வர், சிறுவனை தர தரவென இழுத்து வந்து, முதலாவது தளத்திலிருந்து ஒற்றைக்காலை பிடித்தபடி கீழே தொங்கவிட்டுள்ளார்.
இந்த தண்டனை மூலம் சக மாணவர்களுக்கு பாடம் புகட்டவும் நினைத்துள்ளார். அதன்படி சிறுவன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதும், அவனை மீட்டு வகுப்பறைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மீது புகார் பதியவும் உத்தரவிட்டுள்ளார்.
Tags :