குஜராத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Editor / 31-10-2022 08:39:05am
குஜராத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தில் புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார். ஆற்றில் விழுந்த சிலர் அங்கிருந்த வயரை பிடித்தபடி உயிர் பிழைத்ததாகவும், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதே விபத்துக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாலம் அறுந்தபோது சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாலத்தில் இருந்ததாகவும், ஆற்றில் விழுந்த அவர்களில் 40 பேர் வரை மீட்கப்பட்டு விட்டதாகவும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆசிஷ் பாட்டியா கூறினார். ஆற்றுக்குள் விழுந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo