தினம் ஒரு திருமுறை

by Admin / 24-07-2021 04:04:38pm
தினம் ஒரு திருமுறை

 

தினம் ஒரு திருமுறையில் இன்று  நாம் பார்த்து, கேட்க இருப்பது திருஞானசம்பந்த சுவாமிகள்
இரண்டாம் திருமுறையில்
099 வது திருப்பதிகமாக அருளிச்செய்த திருக்கோடிகாவல் திருமுறை திருப்பதிகம்

"இன்று நன்று நாளை நன்று என்று"

தற்போது மக்கள் வழக்கில் இத்தலம் திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது.

மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது.

கண்டராதித்த சோழன்
மனைவி செம்பியன் மாதேவி இக்கோயிலைக் கற்கோயிலாக ஆக்கினாள்.

இறைவனை வணங்குவதற்கு கால நேரம் பார்க்காமலும், காலம் தாழ்த்தாமலும் நினைத்தவுடன் வணங்க வேண்டும் என திருக்கோடிக்காவல் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடி அருளியுள்ளார்.

இறைவர் திருப்பெயர் :
ஸ்ரீ திருகோடீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் :
 ஸ்ரீ வடிவாம்பிகை

ஆலய முகவரி : அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோவில், திருக்கோடிகாவல், திருக்கோடிகாவல் அஞ்சல், வழி நரசிங்கன்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 609802.

திருமுறை பதிக வரிகள:

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. ..... (01)

அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர் நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ வில்லையன்ன வாணுதல் வெள்வளை ஒர் பாகமாம் கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே. ..... (02)

துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர் தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின் அக்கு அணிந்து அரைமிசை ஆறு அணிந்த சென்னிமேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்மினே. ..... (03)

பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழுமினோ மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாதொர் பாகமாக் கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. ..... (04)

முன்னை நீர்செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. ..... (05)

ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப் பாவம் எத்தனையும் நீர்செய்து ஒரு பயனிலைக் காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல் படக் கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. ..... (06)

ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ பூணல் வெள் எலும்பினான் பொன்திகழ் சடைமுடிக் கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. ..... (07)

மற்றி வாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்து நீர் பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்து எழுமினோ வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர் குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. ..... (08)

மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்பும் ஊர் கொங்குலாம் வளம் பொழில் கோடிகாவு சேர்மினே. ..... (09)

தட்டொடு தழை மயில் பீலிகொள் சமணரும் பட்டுடை விரி துகிலினார்கள் சொல் பயனிலை விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும் கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. ..... (10)

கொந்தணி குளிர்பொழில் கோடிகாவு மேவிய செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம் பந்தன தமிழ் வல்லார் பாவமான
பாறுமே..... (11)

பதிகப் பலன் : பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.

 

 

Tags :

Share via