திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற அதிகாரியை தாக்கி 20 பவுன் நகை கொள்ளை
திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டி சக்திமுருகன் நகரைச் சேர்ந்தவர் பழனி (வயது 57). இவர் குடும்ப நலத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி அருந்ததி. இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வியாழன் இரவு கணவன்-மனைவி இருவரும் ஜன்னலை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். முகமூடி அணிந்த நிலையில் இருந்த அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் கத்தி முனையில் தாக்கி நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர்.மேலும் பழனியை அவர்கள் தாக்கியதால் அவரது மனைவி தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளையும் அவர்களிடம் கொடுத்து விட்டார். மேலும் நகை, பணம் கேட்டு அவர்கள் மிரட்டினர்.
வீட்டு பீரோவில் இருந்த துணிமணிகளை தேடி பார்த்த போது அதில் நகை எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார்.
டி.எஸ்.பி. சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் கைரேகை நிபுணர்களை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அவர்கள் வசிக்கும் தெருவில் கண்காணிப்பு கேமரா ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் கொள்ளையர் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
------------------------------
செ.சிவக்குமார் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்.
Tags :