மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

by Editor / 20-02-2023 07:41:32pm
மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

 

தென்காசி மாவட்டம், மாவட்ட ஊராட்சி குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில், உள்ள 14 மாவட்ட கவுன்சிலர்களும் பங்கேற்று உள்ள சூழலில், முதலில் ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பட்டியலிடப்பட்டது.

 இந்த பட்டியலின் போது, ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கூறப்பட்டது. அப்பொழுது, மாவட்டத்தில் உள்ள 14 கவுன்சிலர்களுக்கும் வெவ்வேறு விதமான நிதி ஒதுக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து 2 -வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி கேள்வி எழுப்பினார்.

 அப்பொழுது, அதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி பேசியபோது, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருக்கு வேண்டிய கவுன்சிலர்கள் சிலர், மாவட்ட செயலாளரிடம் கூறி என்னை மிரட்டி அவர்களுக்கு அதிக நிதி கொடுக்க வைத்தார்கள்.

 என்னை மாவட்ட செயலாளர்  அழைத்து எனது செல்போனை பறித்துக் கொண்டு இதுபோன்று  ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு அதிக நிதி ஒதுக்க செய்தார்கள் என மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி பதில் அளித்ததால் கூட்டமானது பெரும் பரபரப்பானது.

 தொடர்ந்து, கவுன்சிலர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மிரட்டப்பட்டிருந்தால் இது தொடர்பாக புகார் அளியுங்கள் எனவும், இது போன்று கூட்டத்தில் தான் மிரட்டப்பட்டதாக கூறுவது ஏன்? என மாவட்ட கவுன்சிலர் மதிமாரியம்மன் கேள்வி எழுப்பினார்.

 இதற்கு பதில் அளித்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, நான் மாவட்ட ஊராட்சி குழு தலைவி என்ற முறையில் சரியாக நான் நடந்து கொண்டேன். ஆனால் திமுக மாவட்ட செயலாளர் தன்னை மிரட்டி இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைத்தார் என பேசி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரி கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வி போஸ் கடந்த கூட்டங்களில் தனது வார்டுகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டதும் 30 லட்சம் ரூபாய் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டதும் தனக்குத் தெரியும் என்றும் மேலும் ஒப்பந்தக்காரர்களிடம் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி அவர் மீது சுமத்தினார் இதனால் ஆவேசமடைந்த பிற ஆதரவு கவுன்சிலர்கள் மாவட்ட தலைவி தமிழ்ச்செல்வி போஸ்க்காக குரல் கொடுத்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via